8- அறிவியல் - தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்- வினா-விடைகள்

 

தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்



I.  சரியான விடையைத் தேர்ந்தெடு.


1. ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தாவரங்கள் _______ என அழைக்கப்படுகின்றன.

அ) விலங்கினங்கள்

ஆ) தாவர இனங்கள்

இ) உள்ளூர் இனம்

ஈ) அரிதானவை

விடை: இ) உள்ளூர் இனம்


2. காடு அழிப்பு என்பது ____________.

அ) காடுகளை அழித்தல்

ஆ) தாவரங்களை வளர்ப்பது

 இ) தாவரங்களைக் கவனிப்பது

 ஈ) இவை எதுவுமில்லை.

விடை: அ) காடுகளை அழித்தல்


3. சிவப்பு தரவு புத்தகம் ____________ பற்றிய பட்டியலை வழங்குகிறது.

அ) உள்ளூர் இனங்கள்

ஆ) அழிந்துபோன இனங்கள்

இ) இயற்கை இனங்கள்

ஈ) இவை எதுவுமில்லை

விடை: ஈ) இவை எதுவுமில்லை


4. உள்வாழிடப் பாதுகாப்பு என்பது உயிரினங்ளை____________.

அ) ஓரிடத்திற்குள் பாதுகாத்தல்

ஆ) ஓரிடத்திற்கு வெளியே பாதுகாத்தல்

இ) இரண்டும்

ஈ) இவை எதுவுமில்லை

விடை: அ) ஓரிடத்திற்குள் பாதுகாத்தல்


5. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் ____________ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

அ) 1986 ஆ) 1972 இ) 1973 ஈ) 1971

விடை: ஆ) 1972


II. கோடிட்ட இடங்களை நிரப்புக.


1. WWF என்பது __________ ஐக் குறிக்கிறது.

விடை:  உலக வனவிலங்கு நிதியம் -World Wide Fund


2. ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் விலங்குகள் ____________________ என

அழைக்கப்படுகின்றன.

விடை: உள்ளூர் இனங்கள்


3. சிவப்பு தரவுப் புத்தகம் _____________ பராமரிக்கப்படுகிறது.

விடை: இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தால்


4. முதுமலை வனவிலங்கு சரணாலயம் ___________ மாவட்டத்தில்  அமைந்துள்ளது.

விடை: நீலகிரி


5. _____________ நாள் உலக வனவிலங்கு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

விடை: மார்ச் 3-ஆம்


III. பொருத்துக.


கிர் தேசியப் பூங்கா      - குஜராத் 

சுந்தரபன்ஸ் தேசியப் பூங்கா - மேற்கு வங்கம் 

இந்திரா காந்தி தேசியப் பூங்கா - தமிழ்நாடு

கார்பெட் தேசியப் பூங்கா - உத்தரகண்ட் 

கன்ஹா தேசியப் பூங்கா      - மத்திய பிரதேசம் 


IV. மிகச் சுருக்கமாக விடையளி.


1. புவி வெப்பமடைதல் என்றால் என்ன?


புவிப்பரப்பின்மீது விழும் சூரியஒளி வளிமண்டலத்திற்குள் பிரதிபலிக்கின்றது அவ்வாறு பிரதிபலிக்கப்படும் ஒளியின் ஒரு பகுதி பசுமை இல்ல வாயுக்களால் மீண்டும் வளிமண்டலத்திற்குள் பிரதிபலிக்கப்படுகின்றன. மற்றொரு பகுதி விண்வெளிக்குச் செல்கிறது. 

வளிமண்டலத்தில் அதிகரித்துக் காணப்படும் மீத்தேன், கார்பன் டைஆக்சைடு போன்ற வாயுக்கள் வெப்ப ஆற்றலை வளிமண்டலத்திற்குள்ளேயே தக்கவைத்து புவியின் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கின்றன. இது புவிவெப்பமயமாதல் என அழைக்கப்படுகிறது. 


2. அழிந்து வரும் சிற்றினங்கள் என்றால் என்ன?


காடுகள் அழிக்கப்படுவதன் காரணமாக பல்வேறு அரிய வகைத் தாவர மற்றும் விலங்கு சிற்றினங்கள் அழிந்துள்ளன. மேலும், பல்வேறு சிற்றினங்கள் அழியும் தருவாயில் உள்ளன. விலங்குகளின் வாழ்விடம் அழிக்கப்படுவதன் காரணமாக ஒவ்வொரு நாளும் 50 - 100 வகையான விலங்குகள் அழிக்கப்படுகின்றன. இவை அழிந்து வரும் சிற்றினங்கள் எனப்படும்.


3. அழிந்துபோன உயிரினங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.


டைனோசர், ஃபெரணிகள் மற்றும் சில ஜிம்னோஸ்பெர்ம்கள் பூமியில் அழிந்துபோன உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.


4. அழியும் தருவாயில் உள்ள இரண்டு விலங்குகளின் பெயர்களைக் கூறுக.


சிரு (திபெத்திய ஆடு),நீலத் திமிங்கலம், பறக்கும் அணில் போன்றவை அழியும் தருவாயில் உள்ள விலங்குகள் ஆகும்.


5. ICUN என்றால் என்ன?

 

IUCN  என்பது-   International Union for Conservation of Nature - 

இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம் ஆகும்.


V. சுருக்கமாக விடையளி.


1. உயிர்க்கோளக் காப்பகம் என்றால் என்ன?


❂உயிர்க்கோளம் என்பது ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். 

❂மனிதர்களும் இந்த அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளனர். 

❂இந்த இடங்களின் பரப்பளவு சுமார் 5000 சதுர கிலோமீட்டர் இருக்கும். 

❂இவை சுற்றுச்சூழல் அமைப்பு, சிற்றினங்கள் மற்றும் மரபணு வளங்களைப் பாதுகாக்கின்றன. 

❂இப் பகுதிகள் முக்கியமாக பொருளாதார வளர்ச்சிக்காகவே அமைக்கப்பட்டுள்ளன.


இந்தியாவில் உயிர்க்கோளக காப்பகங்கள்:

உயிர்க்கோளக் காப்பகத்தின் பெயர்

மாநிலம்/யூனியன் பிரதேசம்

மன்னார் வளைகுடா

தமிழ்நாடு

நீலகிரி

தமிழ்நாடு


உள்வாழிடப் பாதுகாப்பின் நன்மைகள்: 

⛤சிற்றினங்கள் அவற்றின் வாழ்விடத்திற்கு ஏற்றவாறு தகவமைப்பு பெறுகின்றன. 

⛤சிற்றினங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளலாம்

⛤பழங்குடியின மக்களின் தேவைகள் பாதுகாக்கப்படுகின்றன. 


2. திசு வளர்ப்பு என்றால் என்ன?


தீங்குயிரிகள் அழிக்கப்பட்ட, ஊட்டச்சத்து மிக்க ஊடகத்தில் தாவர செல்கள், திசுக்கள், உறுப்புகள், விதைகள் அல்லது பிற தாவரப் பாகங்களை வளர்க்கும் ஒரு நுட்பமே திசு வளர்ப்பு எனப்படும்.


3. அழியும் தருவாயில் உள்ள இனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.


பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் உணவுச் சங்கிலியில் தனித்துவமான இடத்தைக் கொண்டிருந்து சுற்றுச்சூழலுக்குப் பங்களிக்கின்றன. ஆனால், அவை முக்கியமாக மனிதச் செயல்பாட்டின் காரணமாகவே அழியும் தருவாயில் உள்ளன.


எடுத்துக்காட்டுகள்:

பறவைகள்: வல்லூறு, கழுகு, பருந்து, ராஜாளிப் பறவை, மயில், புறா, வாத்து. 


பாலூட்டிகள்: புலி, சிங்கம், கலைமான், புல்வாய் மான் போன்ற மான் கஸ்தூரி மான், காண்டாமிருகம், யானை, நீலத் திமிங்கலம், பறக்கும் அணில்


4. சிவப்பு தரவு புத்தகத்தின் நன்மைகளை எழுதுக.


சிவப்பு தரவு புத்தகத்தின் நன்மைகள்: 

⛤ஒரு குறிப்பிட்ட சிற்றினத்தின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்யஉதவுகிறது.

⛤இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளைக் கொண்டு உலக அளவிலுள்ள சிற்றினங்களை மதிப்பீடு செய்ய முடியும். 

⛤உலகளவில் ஒரு சிற்றினம் அழிந்து போகக்கூடிய அபாயத்தை இந்தப் புத்தகத்தின் உதவியுடன் மதிப்பிடலாம். 

⛤அழியும் தருவாயிலுள்ள சிற்றினங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை செயல் படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை இது வழங்குகிறது.


5. தமிழ்நாட்டில் உள்ள நான்கு வனவிலங்கு சரணாலயங்களைப் பட்டியலிடுக.


பெயர் 

இடம் 

மேகமலை வனவிலங்கு சரணாலயம்

தேனி

வண்டலூர் வனவிலங்கு சரணாலயம்

சென்னை

களக்காடு வனவிலங்கு சரணாலயம்

திருநெல்வேலி

சாம்பல் நிற அணில் வனவிலங்கு சரணாலயம்

விருதுநகர்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

காஞ்சிபுரம்



6. உயிர்வழிப் பெருக்கம் என்ற வார்த்தையால் நீங்கள் என்ன புரிந்து கொள்கிறீர்கள்?


சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக நச்சுப் பொருள்களின் அளவு அதிகரிப்பதே உயிர்வழிப் பெருக்கம் எனப்படும். 


❂பாதரசம், ஆர்சனிக் போன்ற கன உலோகங்கள், பாலிகுளோரினேட்டட் பைபீனைல்கள் மற்றும் DDT(Dichloro Diphenyl Trichloroethane) போன்ற பூச்சிக்கொல்லிகள் ஆகியவை மாசுபடுத்திகள் ஆகும்.

❂உயிரினங்கள் உண்ணும் உணவு மூலம் இப்பொருள்கள் அவற்றைச் சென்றடைகின்றன. 

❂உணவுச் சங்கிலியின் கீழ்மட்ட நிலையிலுள்ள விலங்குகளை, உயர்மட்ட நிலையிலுள்ள விலங்குகள் உணவாக உட்கொள்ளும்பொழுது நச்சுத்தன்மை வாய்ந்த பொருள்கள் உயர்மட்ட விலங்கினத்தையும் பாதிக்கின்றன.


7. பிபிஆர் (PBR) என்றால் என்ன?


PBR- PEOPLE’S BIODIVERSITY REGISTER

மக்களின் பல்லுயிர் பன்முகத்தன்மை பதிவேடு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது கிராமத்தின் நிலப்பரப்பு மற்றும் மக்கள்தொகை உள்ளிட்ட அங்கு கிடைக்கக்கூடிய அனைத்து உயிர் வளங்கள் பற்றிய விரிவான தகவல்களைக் கொண்ட ஒரு ஆவணமாகும். 


இந்தப் பதிவேட்டைத் தயாரிப்பதன் மூலம் விலங்குகளைப் பேணுதல், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாத்தல், விலங்குகளின் அபிவிருத்தி மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான தகவலை சேகரித்தல் ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன


VI. விரிவாக விடையளி.


1. காடு அழிப்பு என்றால் என்ன? காடு அழிப்பிற்கான காரணங்கள் மற்றும் அவற்றின் விளைவுகளை விளக்குக.


காடுகள் முக்கியமான புதுப்பிக்கத்தக்க வளங்கள் ஆகும். அவை உலகின் நிலப்பரப்பில் ஏறக்குறைய 30 சதவீதம் நிலப்பரப்பை உள்ளடக்கியுள்ளன. பல்வேறு தேவைகளுக்கு நிலப்பரப்பைப் பயன்படுத்துவதற்காக காடுகளை அழிப்பதை காடு அழிப்பு என்கிறோம்.


காடுகள் அழிக்கப்படுவதன் மூலம் வெப்பநிலை அதிகரிப்பு, மழைப்பொழிவு குறைவு போன்ற சுற்றுச்சூழல் சமநிலையின்மை ஏற்பட்டுள்ளன. பல்வேறு தாவர மற்றும் விலங்கு சிற்றினங்களின் அழிவிற்கும் காடுகள் அழிப்பு காரணமாக உள்ளது


காடு அழிப்பிற்கான காரணங்கள்: 

☆காடு அழிப்பு இயற்கையாகவோ அல்லது மனிதச் செயல்பாடுகள் மூலமாகவோ ஏற்படலாம். 

☆தீ மற்றும் வெள்ளம் போன்ற காடு அழிப்பிற்கான இயற்கை காரணங்களாகும். 

☆வேளாண்மை அதிகரிப்பு, கால்நடை வளர்ப்பு, சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல், சுரங்கப் பணி, எண்ணெய் எடுத்தல், அணை கட்டுதல் மற்றும் கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்துதல் ஆகியவை காடு அழிப்பிற்கான மனிதச் செயல்பாடுகளாகும்.


காடு அழிப்பின் விளைவுகள்:

☆மனிதர்களுக்கும், காடுகளுக்குமிடையே நீண்ட நெடுங்காலமாக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. 

☆காடுகளின்றி நமது வாழ்க்கை கடினமானதாக இருக்கும். 

☆மக்கள்தொகை அதிகரிப்பினால் காடுகளின் அழிவு அதிகரித்துள்ளது. ☆ஆண்டுதோறும் 1.1 கோடி ஹெக்டேர் பரப்பிலான காடுகள் உலகமெங்கும் அழிக்கப்படுகின்றன.

☆இதன் காரணமாக பல்வேறு தீய விளைவுகள் ஏற்பட்டுள்ளன. 

☆சிற்றினங்களின் அழிவு,மண் அரிப்பு,நீர் சுழற்சி,வெள்ளம்,புவி வெப்ப மயமாதல், வசிப்பிடங்கள் பாதிக்கப்படுதல் போன்ற விளைவுகள் காடுகளை அழிப்பதால் ஏற்படும்.


2. உள்வாழிடப் பாதுகாப்பு மற்றும் வெளிவாழிடப் பாதுகாப்பின் நன்மைகளை விவாதிக்கவும்.


உள்வாழிடப் பாதுகாப்பின் நன்மைகள்: 

• சிற்றினங்கள் அவற்றின் வாழ்விடத்திற்கு ஏற்றவாறு தகவமைப்பு பெறுகின்றன. 

• சிற்றினங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளலாம். 

• இயற்கை வாழ்விடங்கள் பராமரிக்கப் படுகின்றன. 

• குறைந்த செலவீனத்துடன், எளிதாக இவற்றை நிர்வகிக்க இயலும். 

• பழங்குடியின மக்களின் தேவைகள் பாதுகாக்கப்படுகின்றன. 


வெளிவாழிடப் பாதுகாப்பின் நன்மைகள்: 

• இது சிற்றினங்களின் அழிவைத் தடுக்கிறது. •

 அழியும் தருவாயிலுள்ள விலங்குகளை இந்த வழிகளின் மூலம் விருத்தியடையச் செய்யலாம்.

அழியும் தருவாயிலுள்ள இனங்கள் விருத்தி செய்யப்பட்டு, இயற்கைச் சூழலில் வளர்க்கப்படுகின்றன. 

• இது ஆராய்ச்சி மற்றும் அறிவியல் பணிகளுக்கு உதவுகிறது.


3. ப்ளூ கிராஸ் பற்றி சிறு குறிப்பு வரைக.


☆ப்ளூ கிராஸ் என்பது ‘நமது வாயில்லா நண்பர்களின் கூட்டிணைவு’ என்ற பெயரில் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட விலங்கு நல தொண்டு நிறுவனமாகும். இது 1897ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 

☆ஒவ்வொரு செல்லப் பிராணியும் ஆரோக்கியமான வாழ்க்கையை மகிழ்ச்சியான இல்லங்களில் அனுபவிக்க வேண்டும் என்பதே இந்த தொண்டு நிறுவனத்தின் நோக்கமாகும். 

☆கால்நடைகளுக்கான தனியார் நிறுவனத்தின் சிகிச்சைகளை தங்களது செல்லப் பிராணிகளுக்கு பெற்றுத் தர முடியாத உரிமையாளர்கள், தங்கள் பிராணிகளுக்குத் தேவையான வசதிகளைப் பெற்றுத்தர அவர்களுக்கு உதவுகிறது. 

☆மேலும், கைவிடப்பட்ட விலங்குகள் தங்களுக்குத தேவையான வசிப்பிடங்களைப் பெறுவதற்கு அவற்றிற்கு உதவுவதோடு விலங்குகளைப் பராமரிப்போரின் கடமைகள் பற்றிய விழிப்புணர்வையும் இது ஏற்படுத்துகின்றது. 

☆கேப்டன் வி. சுந்தரம் என்பவர் 1959 ஆம் ஆண்டு ஆசியாவின் மிகப்பெரிய விலங்கு நல அமைப்பான ’இந்திய புளூ கிராஸ்’ என்ற அமைப்பை சென்னையில் நிறுவினார். 

☆அவர் ஒரு இந்திய விமானி மற்றும் விலங்கு நல ஆர்வலர் ஆவார். தற்போது, 'இந்திய ப்ளூ கிராஸ்’ அமைப்பே நாட்டின் மிகப்பெரிய விலங்கு நல அமைப்பு ஆகும். 

☆இது செல்லப்பிராணிகளைத் தத்தெடுத்தல் மற்றும் விலங்குகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல விலங்கு நல நிகழ்வுகளை நடத்துகின்றது. 

☆தங்குமிடம் வழங்குதல், தத்தெடுப்பு, விலங்குகளின் பிறப்புக் கட்டுப்பாடு, மருத்துவமனை வசதிகள், நடமாடும் மருந்தகம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்குதல் ஆகியவை இந்த அமைப்பின் செயல்பாடுகளாகும்.


4. வன உயிரிகள் பாதுகாப்பின் வகைகளை விவரி.


பாதுகாத்தல் என்பது வனவிலங்குகளையும், காடு மற்றும் நீர் போன்ற இயற்கை வளங்களையும் பிறரிடமிருந்து காத்தல், பேணுதல் மற்றும் மேலாண்மை செய்வதாகும். 

அழியும் தருவாயிலுள்ள விலங்குகள் மற்றும் தாவர இனங்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், மீட்டெடுக்கவும் நமக்கு பல்லுயிர் பாதுகாப்பு உதவுகிறது. பாதுகாத்தல் என்பது இரண்டு வகைப்படும். 


அவை: • உள்வாழிடப் பாதுகாப்பு (வாழ்விடத்திற்குள்) 

• வெளிவாழிடப் பாதுகாப்பு (வாழ்விடத்திற்கு வெளியே)


உள்வாழிடப் பாதுகாப்பு:

☆உயிரினங்களை அவை வாழும் இயற்கைச் சூழலிலேயே பாதுகாப்பது உள்வாழிடப் பாதுகாப்பு எனப்படும். 

☆இயற்கை வாழிடங்களைப் பாதுகாத்தல் மற்றும் அழியும் தருவாயில் உள்ள உயிரினங்களை தேசியப் பூங்காக்கள், வனவிலங்குகள் அல்லது பறவைகள் சரணாலயங்கள் மற்றும் உயிர்க்கோளக் காப்பகங்கள் போன்ற சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பராமரிப்பதன் மூலம் உள்வாழிடப் பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது. 

☆இந்தியாவில், சுமார் 73 தேசியப் பூங்காக்கள், 416 சரணாலயங்கள் மற்றும் 12 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.


வெளிவாழிடப் பாதுகாப்பு: 

☆இது உயிரினங்களை அவற்றின் வாழ்விடங்களுக்கு வெளியே பாதுகாக்கும் ஒரு வனவிலங்கு பாதுகாப்பு முறை ஆகும். 

☆உயிரியல் பூங்காக்கள் மற்றும் தாவரத் தோட்டங்களை நிறுவுதல், மரபணுக்களைப் பாதுகாத்தல், நாற்றுக்கள் மற்றும் திசு வளர்ப்பு ஆகியவை இந்த முறையில் பின்பற்றப்படும் சில உத்திகள் ஆகும்.


VII. உயர் சிந்தனை வினாக்கள்.


1. இன்று டைனோசர்களைக் காண முடியுமா? இல்லையெனில், அவை ஏன்

காணப்படுவதில்லை?


☆டைனோசர்களைக் காண முடியாது.

☆ஒரு காலத்தில் டைனோசர் பூமியில் பரவலாகக் காணப்பட்டடைனோசர்கள் இடம் மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாகவோ அல்லது பருவநிலை மாற்றம் காரணமாகவோ அவை பூமியிலிருந்து மறைந்துபோய்விட்டன.



2. காடுகள் அழிப்பால் விலங்குகள் பாதிக்கப்படுகின்றனவா? எவ்வாறு?


காடுகள் அழிப்பு விலங்குகளுக்கு பல ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது.


-வனவிலங்குகள் வாழ்விடங்களை இழக்கின்றன.

-உணவினை இழக்கின்றன.

-சிற்றினங்கள் அழிவதால் உயிர்ச்சங்கிலி பாதிக்கப்பட்டு உயிரினங்கள் அழிவை நோக்கிச் செல்கின்றன.

-புவி வெப்பமயமாதலால் துருவப்பகுதியில் உள்ள விலங்கினங்களும் பாதிக்கப்படுகின்றன.


3. புலி மற்றும் புல்வாய் மான்களின் எண்ணிக்கை ஏன் குறைகிறது?


காடுகள் அழிப்பு, வேட்டையாடுதல் மற்றும் வாழ்விடச் சிதைவு காரணமாக புலி மற்றும் புல்வாய் மான்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.


மேலும்,நேரடியாக கொல்லப்படுவதை விட வாழ்விட இழப்பு மற்றும் இரையின் குறைவுகள் காரணமாகவும் இவ்விலங்குகள் அழிவை நோக்கிச் செல்கின்றன.


ஒரு புலி ஒரு ஆண்டிற்கு சுமார் 50 மான் அளவிலான விலங்குகளை உணவாக உட்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இவற்றின் அளவுகள் குறையும் பொழுது, உணவின்றி இவ்விலங்குகள் அழிய நேரிடும்.


Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்